Add parallel Print Page Options

பிறகு சாலொமோன், “இந்த இருண்ட மேகத்தில் நான் இருப்பேன் என்று கர்த்தர் கூறினார். கர்த்தாவே, நீர் வாழ்வதற்காக நான் ஒரு ஆலயத்தைக் கட்டினேன். இது உயரமான வீடு. என்றென்றும் நீர் இருப்பதற்குரிய இடம்!” என்றான்.

சாலொமோனின் பேச்சு

தனக்கு முன்னால் கூடியிருந்த இஸ்ரவேல் ஜனங்களின் பக்கம் திரும்பி அரசன் சாலொமோன் அவர்களை ஆசீர்வாதம் செய்தான். அவன்,

“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள். என் தந்தையான தாவீதோடு பேசும்போது கர்த்தர் வாக்களித்தபடி இப்போது செய்து முடித்துள்ளார். தேவனாகிய கர்த்தர், ‘எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை வெளியேற்றி அழைத்துக் கொண்டு வந்த நாள் முதலாக நான் இஸ்ரவேலின் எந்த கோத்திரத்திலிருந்தும் என் நாமத்தில் ஒரு வீட்டை கட்டிக்கொள்ள எந்த நகரத்தையும் தேர்ந்தெடுக்கவில்லை. என் இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திச் செல்ல எந்த தலைவனையும் தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால் இப்போது எனது நாமத்திற்காக எருசலேமைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். மேலும் என்னுடைய இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திச் செல்ல தாவீதைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.’

“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்திற்காக ஆலயம் கட்ட வேண்டுமென்று என் தந்தை தாவீது விரும்பினார். ஆனால் கர்த்தர் என் தந்தையிடம், ‘தாவீது, எனது பேரால் ஆலயம் கட்ட விரும்புகிறாய், உனது எண்ணம் நல்லதுதான். ஆனால் உன்னால் ஆலயம் கட்டமுடியாது. உன் மகன் என்பேரால் ஆலயத்தைக் கட்டுவான்’ என்றார். 10 இப்போது கர்த்தர் தான் என்ன செய்யப் போவதாகச் சொன்னாரோ அதனைச் செய்து முடித்துவிட்டார். என் தந்தையின் இடத்தில் நான் புதிய அரசனாக இருக்கிறேன். தாவீது என்னுடைய தந்தை. இப்போது நான் இஸ்ரவேலரின் அரசன். இதுதான் கர்த்தர் அளித்த வாக்குறுதி. நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்திற்காக ஆலயம் கட்டிவிட்டேன். 11 ஆலயத்திற்குள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைத்துவிட்டேன். உடன்படிக்கைப் பெட்டி கர்த்தருடைய உடன்படிக்கையைக் கொண்டுள்ளது. கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களோடு இந்த உடன்படிக்கையைச் செய்தார்” என்றான்.

சாலொமோனின் ஜெபம்

12 சாலொமோன் கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பாக நின்றான். அவன் கூடியிருக்கிற எல்லா இஸ்ரவேல் ஜனங்களின் முன்பாக நின்றான். அவன் தன் கைகளை விரித்தான். 13 சாலொமோன் வெண்கலத்தால் ஒரு மேடை செய்திருந்தான். அது 5 முழ நீளமும் 5 முழ அகலமும் 3 முழ உயரமும் கொண்டது. அதனை வெளிப்பிரகாரத்தின் மத்தியில் வைத்தான். பிறகு அவன் மேடையின் மேல் ஏறினான். இஸ்ரவேல் ஜனங்களின் முன்னால் முழங்கால் போட்டு நின்றான். சாலொமோன் தனது கைகளை வானத்தை நோக்கி விரித்து உயர்த்தினான். 14 சாலொமோன்,

“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, வானத்திலும் பூமியிலும் உம்மை போன்ற ஒரு தேவன் இல்லை. நீர் உம்முடைய அன்பினாலும் இரக்கத்தினாலும் ஆன உடன்படிக்கையை காப்பாற்றி வருகிறீர். தம் முழு இருதயத்துடன் நேர்மையாக வாழ்ந்து உமக்கு பணிந்து நடக்கும்போது, உம்முடைய ஊழியக்காரர்களோடும் உடன்படிக்கையைக் காப்பாற்றி வருகிறீர். 15 உம்முடைய ஊழியக்காரனான தாவீதிற்கு நீர் தந்த வாக்குறுதியை காப்பாற்றினீர். தாவீது என்னுடைய தந்தை. வாய் வழியாக நீர் வாக்குறுதி தந்தீர். மேலும் இன்று உம்முடைய கரங்களினால் அந்த வாக்குறுதி நிறைவேறுமாறு செய்திருக்கிறீர். 16 இப்பொழுது, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய ஊழியக்காரனான தாவீதிற்குத் தந்த வாக்குறுதியைக் காப்பாற்றும். நீர், ‘தாவீது, என் முன்னிலையில் இஸ்ரவேலரின் சிங்காசனத்தில் உனது குடும்பத்திலிருந்து ஒருவனை அமரச்செய்வதில் நீ தோல்வி அடையமாட்டாய். தாங்கள் செய்வதில் உன் மகன்கள் கவனமாக இருந்தால்தான் இது நடைபெறும். அவர்கள் எனது சட்டங்களுக்கு நீ அடிபணிந்தது போலவே பணியவேண்டும்’ என்று வாக்குறுதி கொடுத்தீர். 17 இப்போது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, உமது வாக்குறுதி உண்மையாகட்டும். நீர் இந்த வாக்குறுதியை உமது ஊழியக்காரனான தாவீதிற்குக் கொடுத்திருக்கிறீர்.

18 “ஆனால் தேவனாகிய நீர் உண்மையில் ஜனங்களோடு பூமியில் வசிக்கமாட்டீர் என்பதை நாங்கள் அறிவோம். பரலோகமும் அதற்கு மேலானதும் கூட உம்மை கட்டுப்படுத்த முடியாது. நான் கட்டியுள்ள இந்த ஆலயமும் கூட உம்மை வைத்திருக்காது என்பதை அறிவோம். 19 எனினும் எனது ஜெபத்தைக் கேளும். நான் இரக்கத்திற்காக கெஞ்சுகிறேன். எனது தேவனாகிய கர்த்தாவே, உம்மை அழைக்கும் என் குரலைக் கேளும். உம்மை நோக்கி நான் செய்யும் ஜெபங்களையும் கேளும். நான் உம்முடைய ஊழியக்காரன். 20 இரவும் பகலும் இவ்வாலயத்தை கண்ணோக்கிப் பாரும் என்று ஜெபித்துக்கொள்கிறேன். இந்த இடத்தில் உமது நாமத்தை இடுவதாக நீர் சொன்னீர். உம்முடைய அடியானாகிய நான் இவ்வாலயத்தை நோக்கும்பொழுது செய்யும் ஜெபத்தைக் கேளும். 21 எனது ஜெபங்களைக் கேளும். உம்முடைய இஸ்ரவேல் ஜனங்களின் ஜெபங்களையும் கேளும். நாங்கள் இவ்வாலயத்தை நோக்கி ஜெபிக்கும்போது செவிகொடும். நீர் பரலோகத்தில் இருந்தாலும் எங்களை கவனிப்பீராக. எங்கள் ஜெபங்களை நீர் கேட்கும்போதெல்லாம் எங்கள் மீறுதல்களை மன்னியும்.

22 “ஒருவன் இன்னொருவனுக்கு எதிராகக் குற்றம் செய்து இருக்கலாம். அப்படி நேரும்போது, குற்றம் சாட்டப்பட்டவன் தன்னை நிரபராதி என்று நிரூபிக்கும்பொருட்டு உமது நாமத்தைப் பயன்படுத்தி வாக்குறுதி செய்யலாம். ஆலயத்தில் உள்ள உமது பலிபீடத்தின் முன்னிலையில் அங்ஙனம் ஒருவன் வந்து வாக்குறுதிச் செய்யும்போது, 23 அதனை பரலோகத்தில் இருந்து செவிகொடுத்துக் கேளும். பிறகு அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கும்! கெட்டவர்களைத் தண்டியும். அவன் பிறருக்கு எத்தகைய துன்பத்தைத் தந்தானோ அத்தகைய துன்பத்தை அவன் பெறும்படி செய்யவேண்டும். நேர்மையானதைச் செய்தவன் அப்பாவி என்பதை நிரூபியும்.

24 “உம்முடைய இஸ்ரவேல் ஜனங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்து அதனால் அவர்கள் தம் எதிரிகளால் தோற்கடிக்கப்படலாம். அதற்குப்பின் அவர்கள் உம்மிடம் திரும்பிவந்து உம்முடைய பேரைச் சொல்லி ஜெபித்து உமது ஆலயத்தில் கெஞ்சலாம். 25 அப்பொழுது பரலோகத்திலிருந்து அதனை கேட்டு அவர்களது பாவங்களை மன்னியும். நீர் அவர்களுக்கும் அவர்களது முற்பிதாக்களுக்கும் கொடுத்த நாட்டிற்கு அவர்களை திரும்பக் கொண்டு வாரும்.

26 “வானம் மூடிக்கொள்வதால் மழை வராமல் போகலாம். இது இஸ்ரவேல் ஜனங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்யும்போது நிகழும். இதன் பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் மனம்மாறி வருந்தி இவ்வாலயத்திற்கு வந்து ஜெபம் செய்தால் உம்முடைய பேரைச் சொல்லி முறையிட்டு, உம்முடைய தண்டனையால் தம் பாவங்களையும் விட்டுவிட்டால், 27 அவர்களின் முறையீட்டை பரலோகத்திலிருந்து கேளும். அவர்களது பாவங்களை மன்னியும். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் உம்முடைய ஊழியர்கள். அவர்கள் சரியான முறையில் வாழ்வதற்குக் கற்றுக்கொடுங்கள். உம்முடைய நிலத்திற்கு மழையைக் கொடும். இது உம்மால் உம்முடைய ஜனங்களுக்கு கொடுக்கப்பட்ட நாடு.

28 “நிலத்தில் பெரும் பஞ்சமோ, கொடிய நோயோ, வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி போன்றவற்றால் பயிரழிவோ ஏற்படலாம். அல்லது பகைவர்கள் இஸ்ரவேலரின் நகரங்களைத் தாக்கலாம். அல்லது இஸ்ரவேலில் ஏதாவது நோய் வரலாம். 29 உமது இஸ்ரவேல் ஜனங்களில் எவராவது வந்து ஜெபம் செய்து கெஞ்சினால், ஒவ்வொருவரும் தங்கள் துன்பங்களையும் வலியையும் உணர்ந்து இவ்வாலயத்தை நோக்கித் தம் கைகளை விரித்து முறையிட்டால், 30 பரலோகத்திலிருந்து அதனைக் கேளும். நீர் இருக்கிற பரலோகத்திலிருந்து அவற்றைக் கேட்டு மன்னித்துவிடும். ஒவ்வொருவனும் பெறத்தக்கது எதுவோ அதனைக் கொடும். ஏனென்றால் ஒவ்வொருவனின் மனதிலும் இருப்பதை நீர் அறிவீர். பிறகு, நீர் மட்டுமே ஒருவருடைய மனதில் இருப்பதை அறிவீர். 31 ஜனங்கள் எங்கள் முற்பிதாக்களுக்கு நீர் கொடுத்த நிலத்தில் வசிக்கும்வரை உமக்கு பயந்து கீழ்ப்படிவார்கள்.

32 “ஒருவன் அந்நியனாக, இஸ்ரவேலரின் ஒருவனாக இல்லாமல் இருக்கலாம். எனினும் அவன் தூர நாட்டிலிருந்து இவ்வாலயத்திற்கு உம்முடைய மகத்தான நாமத்தின் நிமித்தமும், உம்முடைய வலிமையான கரத்தின் நிமித்தமும் தண்டிக்கின்ற உம்முடைய கரத்தின் நிமித்தமும் வரலாம். அவ்வாறு அவன் வந்து உமது ஆலயத்தில் ஜெபம் செய்தால், 33 அதனை பரலோகத்திலிருந்து கேளும். நீர் இருக்கிற பரலோகத்திலிருந்தே அவனுக்கு வேண்டியதைச் செய்யும். அதனால் பூமியில் உள்ள அனைவரும் உம்முடைய நாமத்தை அறிந்து உம்மை மதிப்பார்கள். அவர்களும் இஸ்ரவேல் ஜனங்களைப் போன்றே மதிப்பார்கள். பூமியில் உள்ள அனைத்து ஜனங்களும், என்னால் கட்டப்பட்ட இவ்வாலயம் உமது நாமத்தால் அழைக்கப்படும் என்பதை அறிவார்கள்.

34 “உம்முடைய ஜனங்களைத் தம் பகைவர்களுக்கு எதிராக நீர் சண்டையிட அனுப்பும்போது அவர்கள் அங்கிருந்து உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்நகரத்தையோ உம்முடைய நாமத்திற்காக என்னால் கட்டப்பட்ட இவ்வாலயத்தைப் பார்த்தோ ஜெபம் செய்தால், 35 பரலோகத்தில் இருந்து அதனைக் கேளும். உதவிக்காக அவர்கள் கெஞ்சும்போது அதனைக் கேளும். கேட்டு அவர்களுக்கு உதவும்.

36 “ஜனங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்வார்கள். பாவம் செய்யாதவர் யாருமில்லை. அவர்கள் மீது உமக்கு கோபம் வரும். அவர்களை எதிரி தோற்கடிக்குமாறு செய்வீர். மேலும் அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு அருகிலோ தொலைவிலோ இருக்கிற நிலத்திற்குக் கொண்டு செல்லப்படுமாறு செய்வீர். 37 அவர்கள் சிறையிருக்கிற நிலப்பகுதியில் உண்மையை உணர்ந்து மனம் திரும்பி உம்மிடம் கெஞ்சுவார்கள். அவர்கள், ‘நாங்கள் பாவம் செய்தோம். நாங்கள் தவறு செய்துவிட்டோம். கேடு புரிந்துவிட்டோம்’ என்று சொல்வார்கள். 38 பிறகு அவர்கள் கைதிகளாக உள்ள நிலத்தில் தங்கள் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் உம்மிடம் திரும்பிவருவார்கள். அவர்கள் உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமது முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்நாட்டை நோக்கி ஜெபம் செய்யலாம். உம்முடைய பேரால் நான் கட்டிய இவ்வாலயத்தை நோக்கியும் அவர்கள் வணங்கி ஜெபம் செய்யலாம். 39 அப்போது பரலோகத்திலிருந்து நீர் அவற்றைக் கேளும். நீர் இருக்கும் பரலோகத்திலிருந்தே அவர்களது ஜெபங்களை ஏற்றுக் கொண்டு உதவும். உமக்கு எதிராக பாவம் செய்த உம்முடைய ஜனங்களை மன்னியும். 40 இப்போது எனது தேவனே, உம்முடைய கண்களையும் செவிகளையும் திறக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் இங்கிருந்து ஜெபிப்பதையெல்லாம் கேட்டு அதில் கவனம் செலுத்தும்.

41 “இப்போது தேவனாகிய கர்த்தாவே! எழுந்திரும். உம்முடைய பலத்தைக் காட்டும்.
    இந்த உடன்படிக்கைப் பெட்டி வீற்றிருக்கும் இடத்திற்கு வருக!
உம்முடைய ஆசாரியர்கள் இரட்சிப்பின் ஆடையை அணியட்டும்.
    இத்தகைய நல்ல காரியங்களைப்பற்றி உம்முடைய உண்மையான தொண்டர்கள் மகிழட்டும்.
42 தேவனாகிய கர்த்தாவே! அபிஷேகிக்கப்பட்ட உம்முடைய அரசனை ஏற்றுக்கொள்ளுங்கள்.
    உம்முடைய உண்மையுள்ள ஊழியக்காரனான தாவீதை நினைத்துக்கொள்ளும்” என்றான்.