Add parallel Print Page Options

மிகாயா ஆகாப் அரசனை எச்சரிக்கிறான்

18 யோசபாத்துக்கு மிகுந்த செல்வமும், சிறப்பும் இருந்தது. இவன் ஆகாப் அரசனோடு ஒரு திருமண ஒப்பந்தம் செய்துகொண்டான். சில ஆண்டுகளுக்குப் பிறகு யோசபாத் ஆகாபைப் பார்க்க சமாரியா நகரத்திற்குச் சென்றான். ஆகாப் பல ஆடுகளையும் பசுக்களையும் பலி கொடுத்தான். யோசபாத்துக்கும் அவனோடு உள்ள ஜனங்களுக்கும் அவற்றைக் கொடுத்தான். ஆகாப் யோசபாத்திடம் ராமோத் கிலியாத்தைத் தாக்கும்படி உற்சாகப்படுத்தினான். ஆகாப் யோசபாத்திடம், “கிலேயாத்திலுள்ள ராமோத்துக்கு என்னோடு வருகின்றீரா?” என்று கேட்டான். ஆகாப் இஸ்ரவேலின் அரசன். யோசபாத் யூதாவின் அரசன். யோசபாத் ஆகாபிடம், “நான் உன்னைப் போன்றவன். என் ஜனங்களும் உன் ஜனங்களைப் போன்றவர்களே. நாங்கள் உங்களோடு போரிலே சேர்ந்துக்கொள்வோம்” என்றான். யோசபாத் மேலும் ஆகாபிடம், “ஆனால் முதலில், நாம் நமது கர்த்தரிடமிருந்து செய்தியை எதிர்ப்பார்ப்போம்” என்றான்.

எனவே அரசன் ஆகாப் 400 தீர்க்கதரிசிகளை அணிதிரட்டினான். ஆகாப் அவர்களிடம், “நம்மால் ராமோத் கீலேயாத்துக்கு எதிராகப் போக முடியுமா அல்லது முடியாதா?” என்று கேட்டான்.

தீர்க்கதரிசிகளோ, “போக முடியும், ராமோத் கீலேயாத்தைத் தோற்கடிக்க தேவன் உதவுவார்” என்றனர்.

ஆனால் யோசபாத், “கர்த்தருடைய தீர்க்கதரிசி யாராவது இங்கே இருக்கிறார்களா? கர்த்தருடைய விருப்பத்தை அவர்கள் மூலம் கேட்க விரும்புகிறேன்” என்றான்.

பிறகு அரசன் ஆகாப், யோசபாத்திடம், “இன்னும் ஒருவன் இங்கே இருக்கிறான். அவன் மூலமாக நாம் கர்த்தரிடம் கேட்கலாம். ஆனால் நான் அந்த மனிதனை வெறுக்கிறேன். ஏனென்றால் அவன் எனக்காக கர்த்தரிடமிருந்து எந்த நல்லச் செய்தியையும் சொல்லமாட்டான். எப்பொழுதும் அவன் எனக்காகக் கெட்ட செய்திகளையே வைத்திருப்பான். அவனது பெயர் மிகாயா, அவன் இம்லாவின் மகன்” என்றான். ஆனால்

யோசபாத்தோ, “ஆகாப், நீ அப்படிச் சொல்லக்கூடாது!” என்றான்.

பிறகு அரசன் ஆகாப் தனது ஒரு அதிகாரியை அழைத்து, “வேகமாகப் போய், இம்லாவின் மகனான மிகாயாவை அழைத்து வா” என்றான்.

இஸ்ரவேலின் அரசனான ஆகாபும், யூதாவின் அரசனான யோசபாத்தும் அரச உடை அணிந்து கொண்டனர். அவர்கள் தம் சிங்காசனங்களில் சமாரியாவின் ஒலிமுக வாசலுக்கு அருகே உள்ள களத்தில் அமர்ந்திருந்தனர். அந்த 400 தீர்க்கதரிசிகளும் இரு அரசர்களின் முன் தங்கள் செய்தியைச் சொன்னார்கள். 10 கெனானாவின் மகனான சிதேக்கியா தனக்கு இரும்பு கொம்புகளைச் செய்தான். அவன், “இதுதான் கர்த்தர் சொன்னது: நீ இந்த இரும்பு கொம்புகளை அணிந்துக் கொண்டு அராமியரை அழிந்துபோகும்வரை தாக்குவாய்” என்றான். 11 அனைத்து தீர்க்கதரிசிகளும் இதனையே சொன்னார்கள். அவர்கள், “ராமோத் கீலேயாத் நகரத்திற்கு செல். நீ வெற்றி பெறுவாய். அராமிய ஜனங்களை வெல்லும்படி கர்த்தர் உதவுவார்” என்றனர்.

12 மிகாயாவை அழைத்துவரப்போன தூதுவன் அவனிடம் போய், “மிகாயா! கவனி. அனைத்து தீர்க்கதரிசிகளும் ஒரே மாதிரி கூறுகின்றனர். அரசன் வெற்றிபெற முடியும் என அவர்கள் கூறுகின்றனர். எனவே அவர்கள் சொல்வதையே நீயும் கூறு. நீயும் நல்ல செய்தியைக் கூறவேண்டும்” என்றான்.

13 ஆனால் மிகாயா, “கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்கிறேன். எனது தேவன் சொல்வதையே நான் சொல்ல முடியும்” என்று பதிலளித்தான்.

14 பிறகு மிகாயா ஆகாப் அரசனிடம் வந்தான். அரசன் அவனிடம், “மிகாயா நாங்கள் ராமோத் கீலேயாத் நகரத்திற்குப் போரிடப் போகலாமா வேண்டாமா?” என்று கேட்டான்.

அதற்கு மிகாயா, “போ அவர்களோடு போர் செய். அந்த ஜனங்களை வெல்ல கர்த்தர் துணைசெய்வார்” என்றான்.

15 அரசன் ஆகாப் மிகாயாவிடம், “கர்த்தருடைய நாமத்தால் என்னிடம் உண்மையை மட்டுமே கூற வேண்டுமென்று பலமுறை உன்னை நான் சத்தியம் செய்ய வைத்தேன்” என்றான்.

16 பிறகு மிகாயா, “இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் மலைப்பகுதியில் சிதறி ஓடுவதை நான் பார்த்தேன். அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் உள்ளனர். கர்த்தர், ‘அவர்களுக்குத் தலைவன் இல்லை. ஒவ்வொருவரும் பத்திரமாக வீட்டிற்குப் போகட்டும்’ என்று கூறினார்” என்றான்.

17 இஸ்ரவேல் அரசனான ஆகாப் யோசபாத்திடம், “கர்த்தரிடமிருந்து எனக்கு மிகாயா நல்ல செய்தியைச் சொல்லமாட்டான் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறேன். அவன் எனக்கு கெட்டச் செய்திகளை மட்டுமே கூறுவான்” என்றான்.

18 அதற்கு மிகாயா, “கர்த்தரிடமிருந்து வந்த செய்தியைக் கேள்: கர்த்தர் தன் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பதை நான் பார்த்தேன். பரலோகத்தின் படை அவரது வலதுபுறமும் இடதுபுறமும் உள்ளன. அனைத்து படைகளும் அவரைச் சுற்றிலும் நின்றுக்கொண்டிருக்கிறது. 19 கர்த்தர், ‘ராமோத் கீலேயாத் நகரின் மேல் படையெடுக்குமாறு செய்து அப்போரில் ஆகாப் மரிக்குமாறு செய்ய, யாரால் தந்திரமாய்ச் செயல்பட முடியும்?’ என்று கேட்டார். அதற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறானதைக் கூறினார்கள். 20 பிறகு ஒரு ஆவி வந்து கர்த்தருக்கு முன்பாக நின்றது. அந்த ஆவி ‘நான் ஆகாபிடம் தந்திரமாய்ச் செயல்படுகிறேன்’ என்று கூறியது. அதனிடம், ‘எப்படி?’ என்று கர்த்தர் கேட்டார். 21 அதற்கு அது, ‘நான் போய் ஆகாபின் தீர்க்கதரிசிகளின் வாயில் பொய் சொல்லும் ஆவியாக இருப்பேன்’ என்றது. அதற்குக் கர்த்தர், ‘நீ ஆகாபை ஏமாற்றுவதில் வெற்றி பெறுவாய். எனவே போய் அவ்வாறே செய்’ என்றார்.

22 “இப்போது ஆகாப் கவனி. பொய் சொல்லும் ஆவியை உன் தீர்க்கதரிசிகளின் வாயில் கர்த்தர் இருக்கச் செய்துள்ளார். எனவே கர்த்தர் சொன்னபடி உனக்கு தீமையே ஏற்படும்” என்றான்.

23 பிறகு சிதேக்கியா மிகாயாவின் அருகில் சென்று அவனது முகத்திலே அறைந்தான். சிதேக்கியாவின் தந்தை கெனானா. சிதேக்கியா, “மிகாயா, கர்த்தருடைய ஆவி எந்த வழியாய் என்னைவிட்டு உன்னிடம் வந்து இவ்வாறு பேச வைத்தது?” என்று கேட்டான்.

24 அதற்கு மிகாயா, “சிதேக்கியா! நீ உள்ளறைக்குள்ளே ஓடி பதுங்கும் நாளிலே அதனைக் காண்பாய்” என்றான்.

25 பிறகு ஆகாப் அரசன், “மிகாயாவை அழைத்துக் கொண்டு நகர ஆளுநராகிய ஆமோனிடத்திலும் அரச குமாரனாகிய யோவாசிடத்திலும் செல்லுங்கள். 26 அவர்களிடம், இதுதான் அரசன் சொன்னது: ‘மிகாயாவைச் சிறையிலே அடையுங்கள். நான் போரிலிருந்து திரும்பி வரும்வரை சிறிது அப்பத்தையும், தண்ணீரையும் தவிர வேறு எதையும் தராதீர்கள்’ எனக் கூறுங்கள்” என்றான்.

27 அதற்கு மிகாயா, “ஆகாப்! நீ போர்களத்திலிருந்து பத்திரமாகத் திரும்பி வந்தால், பிறகு கர்த்தர் என் மூலமாகப் பேசவில்லை. ஜனங்களே! நான் சொல்வதைக் கேட்டு நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!” என்றான்.

ராமோத் கீலேயாத்தில் ஆகாப் கொல்லப்படுகிறான்

28 இஸ்ரவேல் அரசனான ஆகாபும் யூதாவின் அரசனான யோசபாத்தும் ராமோத் கீலேயாத்தைத் தாக்கினார்கள். 29 ஆகாப் அரசன் யோசபாத்திடம், “நான் போர்க்களத்திற்குள் நுழையுமுன் என் தோற்றத்தை மாற்றிக்கொள்வேன். ஆனால் நீ உனது உடையையே அணிந்துகொள்” என்றான். எனவே இஸ்ரவேலின் அரசனாகிய ஆகாப் தன் ஆடையை மாற்றிக்கொண்டான். இருவரும் போர்க்களத்துக்குச் சென்றார்கள்.

30 ஆராம் அரசன் தனது இரதப்படைத் தளபதியிடம் ஒரு கட்டளையிட்டான். அவன் அவர்களிடம், “எவரோடும் சண்டையிடவேண்டாம். அவன் பெரியவனாயினும் சரி, சிறியவனாயினும் சரியே. ஆனால் இஸ்ரவேலின் அரசனான ஆகாபிடம் மட்டும் சண்டையிடுங்கள்” என்றான். 31 இரதப்படைத் தளபதிகள் யோசபாத்தைக் கண்டதும் “இஸ்ரவேலின் அரசனான ஆகாப் அங்கே இருக்கிறான்!” என்று எண்ணினார்கள். எனவே யோசபாத்தைத் தாக்க அவர்கள் திரும்பினார்கள். ஆனால் யோசபாத் சத்தமிட்டு வேண்டினபடியால் கர்த்தர் அவனுக்கு உதவினார். தேவன் இரதப்படைத் தளபதிகளை யோசபாத்தை விட்டு விலகும்படி செய்தார். 32 அவர்களுக்கு இவன் இஸ்ரவேல் அரசனான ஆகாப் இல்லை என்று தெரிந்ததும் துரத்துவதை விட்டுவிட்டனர்.

33 ஆனால் ஒரு வீரன் எந்தவித குறியும் இல்லாமல் ஒரு அம்பை விட்டான், அது இஸ்ரவேல் அரசனான ஆகாபின் மீது பாய்ந்தது. அது ஆகாபின் உடலில் கவசம் இல்லாத பகுதியின் மேல் பாய்ந்தது. ஆகாப் தன் இரதவோட்டியிடம், “இரதத்தைத் திருப்பிக் கொள். நான் காயப்பட்டிருக்கிறேன். என்னை போர்களத்துக்கு வெளியே கொண்டு செல்!” என்றான்.

34 அன்று போர் மிகவும் மோசமாக நடை பெற்றது. அன்று மாலைவரை ஆகாப் ஆராமியருக்கு எதிராக இரதத்தில் நின்றுக்கொண்டிருந்தான். சூரியன் மறைந்ததும் அவன் மரித்தான்.