Add parallel Print Page Options

கேகிலாவில் தாவீது

23 ஜனங்கள் தாவீதிடம், “பாருங்கள் பெலிஸ்தியர்கள் கேகிலாவிற்கு எதிராகப் போரிடுகிறார்கள். அவர்கள் அறுவடை களத்திலிருந்து தானியங்களைக் கொள்ளையிடுகிறார்கள்” என்றனர்.

உடனே தாவீது கர்த்தரிடம், “நான் போய் பெலிஸ்தியர்களோடு போரிடட்டுமா?” என்று கேட்டான்.

கர்த்தர், “ஆமாம் நீ பெலிஸ்தியர்களோடு போரிட்டு கேகிலாவைக் காப்பாற்று” என்று பதிலுரைத்தார்.

ஆனால் தாவீதைச் சேர்ந்தவர்கள், “பாருங்கள், யூதாவில் உள்ள நாங்களே பயந்து போயுள்ளோம். பெலிஸ்தியர்கள் இருக்கும் இடத்திற்குப் போனால் எவ்வளவு பயப்படுவோம் என எண்ணிப்பாரும்” என்றனர்.

தாவீது மீண்டும் கர்த்தரிடம் கேட்டான். கர்த்தர், “கேகிலாவிற்குப் போ, பெலிஸ்தியர்களை வெல்ல நான் உதவுவேன்” என்றார். எனவே, தாவீதும் அவனது ஆட்களும் கேகிலாவிற்கு சென்றனர். அவர்கள் பெலிஸ்தியரோடு சண்டையிட்டு தோற்கடித்து, அவர்களின் மந்தைகளைக் கவர்ந்துகொண்டனர். இவ்வாறு, தாவீது கேகிலாவைக் காப்பாற்றினான். (அபியத்தார் தாவீதிடம் ஓடிப்போனபோது அவன் தன்னோடு ஏபோத்தையும் கொண்டு சென்றான்.)

ஜனங்கள் சவுலிடம் வந்து தாவீது கேகிலாவில் இருப்பதை அறிவித்தனர். அதற்கு சவுல் “தேவன் தாவீதை எனக்குக் கொடுத்தார்! அவன் தானே வலைக்குள் விழுந்திருக்கிறான். அவன் பூட்டிப் போடக்கூடிய கோட்டைக் கதவுகளை உடைய நகரத்திற்குள் போய்விட்டான்” என்றான். சவுல் தனது படை வீரர்களைப் போரிடுவதற்காகக் கூட்டினான். அவர்கள் கேகிலாவிற்கு சென்று தாவீதையும் அவனது ஆட்களையும் தாக்கத் தயாரானார்கள்.

தனக்கு எதிரான சவுலின் திட்டங்களைத் தாவீது அறிந்துக்கொண்டான். பிறகு ஆசாரியனாகிய அபியத்தாரிடம், “ஏபோத்தை கொண்டு வா” என்றான்.

10 தாவீது, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, எனக்காக சவுல் இந்நகரத்திற்கு வந்து அதை அழிக்கப்போவதாக அறிந்தேன். 11 சவுல் கேகிலாவிற்கு வருவாரா? இங்குள்ள ஜனங்கள் என்னை சவுலிடம் ஒப்படைப்பார்களா? இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தாவே! நான் உமது தாசன்! தயவு செய்து சொல்லும்!” என்று வேண்டினான்.

“சவுல் வருவான்” என்று கர்த்தர் பதிலுரைத்தார்.

12 மீண்டும் தாவீது, “என்னையும் எனது ஆட்களையும் கேகிலா ஜனங்கள் சவுலிடம் ஒப்படைத்துவிடுவார்களா?” என்று கேட்டான்.

“அவர்கள் செய்வார்கள்” என்று கர்த்தர் சொன்னார்.

13 எனவே தாவீதும் அவனது ஆட்களும் கேகிலாவை விட்டு விலகினார்கள். அவனோடு 600 பேர் சென்றனர். அவர்கள் ஒவ்வொரு இடமாக நகர்ந்தனர். கேகிலாவிலிருந்து தாவீது தப்பிவிட்டதை சவுல் அறிந்தான். எனவே அவன் அந்நகரத்திற்குப் போகவில்லை.

சவுல் தாவீதைத் துரத்துகிறான்

14 பாலைவனத்தின் கோட்டைகளில் தாவீது மறைந்திருந்தான். அவன் சீப் பாலைவனத்தில் உள்ள மலை நகரத்திற்குச் சென்றான். ஒவ்வொரு நாளும் சவுல் தாவீதைத்தேடினான். ஆனால் சவுல் தாவீதைப் பிடிக்கும்படி கர்த்தர் அனுமதிக்கவில்லை.

15 சீப் பாலைவனத்தில் உள்ள ஓரேஷில் தாவீது இருந்தான். சவுல் அவனைக் கொல்ல முயன்றதால் அவன் பயந்தான். 16 ஆனால் சவுலின் மகனான யோனத்தான் ஓரேஷில் தாவீதை சந்தித்தான். தேவனில் உறுதியான நம்பிக்கையை வைக்கும்படி யோனத்தான் தாவீதுக்கு உதவினான். 17 யோனத்தான், “பயப்படாதே என் தந்தையான சவுல் உன்னைக் கொல்லமாட்டார். நீ இஸ்ரவேலின் அரசனாவாய். நான் உனக்கு அடுத்தவனாக இருப்பேன். இதுவும் என் தந்தைக்குத் தெரியும்” என்றான்.

18 யோனத்தானும், தாவீதும் கர்த்தருக்கு முன்னால் ஒரு ஒப்பந்தம் செய்துக் கொண்டனர். யோனத்தான் தன் வீட்டிற்குப் போக, தாவீது ஓரேஷிலேயே தங்கினான்.

சீப்பிலுள்ள ஜனங்கள் தாவீதைப் பற்றி சவுலிடம் சொல்கின்றனர்

19 சீப்பிலுள்ள ஜனங்கள் சவுலைப் பார்க்க கிபியாவிற்குச் சென்றனர். அவர்கள், “எங்கள் பகுதியில் தான் தாவீது ஒளிந்திருக்கிறான். அவன் ஆகிலா மேட்டில் உள்ள, ஓரேஷ் கோட்டைக்குள் இருக்கிறான். அது யெஷிமோனின் தெற்கில் உள்ளது. 20 இப்போது அரசே நீர் விரும்பும் எந்தக் காலத்திலும் இறங்கி வாரும். தாவீதை உங்களிடம் ஒப்படைப்பது எங்கள் கடமை” என்றார்கள்.

21 சவுலோ, “எனக்கு உதவினதற்காக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். 22 போய், அவனைப்பற்றி அதிகமாகத் தெரிந்துக்கொள்ளுங்கள். தாவீது எங்கே தங்கியிருக்கிறான்? அவனை யார் யார் வந்து சந்திக்கின்றனர். ‘தாவீது தந்திரக்காரன். அவன் என்னை ஏமாற்ற விரும்புகிறான்’ என்று நினைத்தான். 23 தாவீது ஒளிந்துள்ள எல்லா இடங்களையும் அறிந்துகொள்ளுங்கள். பின் என்னிடம் வந்து எல்லாவற்றையும் கூறுங்கள். பின் நான் உங்களோடு வருவேன். தாவீது அந்தப் பகுதியில் இருந்தால் அவனைக் கண்டுபிடிப்பேன். யூதாவில் உள்ள அனைத்துக் குடும்பங்களிலும் அவனைத் தேடிக் கண்டுபிடிப்பேன்” என்றான்.

24 பின்னர் சீப்பிலுள்ள ஜனங்கள் திரும்பிப் போனார்கள். சவுல் தாமதமாகப் போனான்.

தாவீதும் அவனது ஆட்களும் மாகோன் பாலைவனத்தில் இருந்தனர். அவர்கள் இருந்த பகுதி எஷிமோனின் தென் பகுதியில் இருந்தது. 25 சவுல் தன் ஆட்களோடு தாவீதைத் தேடிச் சென்றான். சவுல் தேடுவதாக ஜனங்கள் தாவீதை எச்சரித்தனர். அதனால் மாவோனில் உள்ள “கன்மலையில்” தாவீது இறங்கினான். சவுல் இதனை அறிந்து அங்கும் தாவீதைத் தேடிப்போனான்.

26 சவுல் மலையின் ஒரு பகுதியில் இருந்த போது தாவீதும் அவனது ஆட்களும் அடுத்த பகுதியில் இருந்தனர். தாவீது சவுலை விட்டு விரைவாக விலகினான். சவுலும் அவனது ஆட்களும் மலையைச் சுற்றிப் போய் தாவீதையும் அவனது ஆட்களையும் பிடிக்க முயன்றனர்.

27 அப்போது ஒரு தூதுவன் சவுலிடம் வந்து, “வேகமாக வாருங்கள்! பெலிஸ்தியர் நம்மை தாக்கப் போகின்றனர்!” என்றான்.

28 எனவே சவுல் தாவீதைத் துரத்துவதை விட்டு பெலிஸ்தியரோடு சண்டையிடப் போனான். எனவே ஜனங்கள் இந்த மலையை “வழுக்கும் பாறை” அல்லது “சேலா அம்மாலிகோத்” என்று அழைக்கின்றனர். 29 தாவீது அவ்விடத்தை விட்டு என்கேதியிலுள்ள கோட்டைகளுக்குச் சென்றான்.