Add parallel Print Page Options

தேவன் நாதாபையும் அபியூவையும் அழித்தல்

10 பின் ஆரோனின் மகன்களாகிய நாதாபும் அபியூவும் பாவம் செய்தனர். ஒவ்வொருவனும் ஒரு நறுமண கலசத்தை எடுத்து, அதில் தேவன் அங்கீகரியாத நெருப்பைப் பயன்படுத்தி அதில் நறுமணப் பொருளைப் போட்டனர். மோசே கட்டளையிட்டுச் சொல்லியிருந்த நெருப்பை அவர்கள் பயன்படுத்தவில்லை. எனவே கர்த்தரின் சந்நிதியிலிருந்து நெருப்பு கிளம்பி நாதாபையும் அபியூவையும் அழித்தது. அவர்கள் கர்த்தரின் சந்நிதானத்திலேயே மரித்துப் போனார்கள்.

பிறகு மோசே ஆரோனிடம், “‘என் அருகிலே வருகிற ஆசாரியர்கள் என்னை மதிக்க வேண்டும். நான் அவர்களுக்கும் எல்லா ஜனங்களுக்கும் பரிசுத்தமாக விளங்க வேண்டும்’ என்று கர்த்தர் கூறுகிறார்” என்றான். ஆகையால் ஆரோன் தன் மகன்கள் மரணமடைந்ததை குறித்து எதுவும் சொல்லவில்லை.

ஆரோனின் சிறிய தந்தையான ஊசியேலுக்கு மிஷாயேல், எல்சாபான் என்று இரண்டு மகன்கள் இருந்தார்கள். மோசே அவர்களிடம், “பரிசுத்த இடத்தின் முற்பகுதிக்குப் போய் உங்கள் சகோதரர்களின் உடல்களை அங்கிருந்து எடுத்து முகாமுக்கு வெளியே கொண்டு போங்கள்” என்றான்.

மிஷாயேலும் எல்சாபானும் மோசே சொன்னபடியே அவர்களின் உடல்களை முகாமுக்கு வெளியே கொண்டு போனார்கள். நாதாப், அபியூவின் உடல்களில் ஆசாரியர்களுக்குரிய சிறப்பான உடைகள் இன்னும் இருந்தன.

பிறகு மோசே ஆரோனின் வேறு இரு மகன்களான எலெயாசரிடமும், இத்தாமாரிடமும்:, “உங்கள் சோகத்தை வெளியே காண்பிக்கவோ, உங்கள் ஆடைகளை கிழிக்கவோ, உங்கள் தலை முடியை கலைக்கவோ வேண்டாம். அப்பொழுது நீங்கள் கொல்லப்படமாட்டீர்கள். கர்த்தர் நம் எல்லா ஜனங்கள் மீதும் கோபம் கொள்ளமாட்டார். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் உங்கள் உறவினர். எனவே அவர்கள் நாதாபும் அபியூவும் மரித்ததற்காக அழட்டும். ஆனால் நீங்கள் இந்த ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலை விட்டு கூட வெளியே போகக்கூடாது. நீங்கள் இதைவிட்டுப் போனால் மரித்துப்போவீர்கள். ஏனென்றால் கர்த்தரின் அபிஷேக எண்ணெய் உங்கள் மேல் உள்ளது” என்றான். ஆகவே ஆரோனும், எலெயாசரும், இத்தாமாரும், மோசேக்குக் கீழ்ப்படிந்தனர்.

பிறகு கர்த்தர் ஆரோனிடம், “நீங்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் நுழையும்போது திராட்சை ரசத்தையோ அல்லது மதுவையோ அருந்திவிட்டு வரக்கூடாது. நீங்கள் அவற்றைக் குடித்தால் மரித்துப்போவீர்கள். இந்தச் சட்டமானது என்றென்றைக்கும் உங்கள் தலைமுறைகளுக்கெல்லாம் தொடரும். 10 நீங்கள் பரிசுத்தமான பொருட்களுக்கும் பரிசுத்தமற்ற பொருட்களுக்கும், தீட்டுள்ள பொருட்களுக்கும், தீட்டில்லாத பொருட்களுக்கும் இடையில் தெளிவான வேறுபாட்டினை உருவாக்க வேண்டும். 11 கர்த்தர் தம் சட்டங்களை மோசேயிடம் கொடுத்தார். மோசே அந்த சட்டங்களை ஜனங்களிடம் கொடுத்தான். ஆரோனாகிய நீ ஜனங்களுக்கு அந்த சட்டங்களைக் கற்பிக்க வேண்டும்” என்றார்.

12 ஆரோனின் மற்ற இரண்டு மகன்களான எலெயாசரும், இத்தாமாரும் உயிரோடு இருந்தனர். மோசே ஆரோனிடமும் அவனது இரு மகன்களிடமும், “பலிக்காகக் கொண்டு வந்த பலியில் இன்னும் கொஞ்சம் தானியக் காணிக்கை மிஞ்சியுள்ளது. அதில் புளிப்பு எதுவும் சேர்க்காமல் பலிபீடத்தின் அருகில் இருந்து அதை உண்ண வேண்டும், ஏனென்றால், அக்காணிக்கையானது மிக பரிசுத்தமானதாகும். 13 இது கர்த்தருக்காகச் செலுத்தப்பட்ட தகன பலியாகும். நான் உங்களுக்குக் கொடுத்த சட்டத்தின்படி இதன் ஒரு பகுதி உனக்கும் உன் மகன்களுக்கும் சொந்தமாகும். ஆனால் அவற்றைப் பரிசுத்தமான ஒரு இடத்தில் வைத்து உண்ண வேண்டும்.

14 “நீங்களும் உங்கள் மகன்களும் மகள்களும் அசைவாட்டும் பலியில் உள்ள மார்புக்கண்டத்தை உண்ண வேண்டும். நீங்கள் இதனைப் பரிசுத்தமான இடத்தில் வைத்து உண்ண வேண்டும் என்ற அவசியமில்லை, ஆனால் அவற்றைத் தீட்டில்லாத இடத்தில் வைத்து உண்ண வேண்டும். ஏனென்றால் இவை சமாதானப் பலியில் இருந்து பெறப்பட்டவை. இஸ்ரவேலின் ஜனங்கள் இதனை தேவனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்துள்ளனர். அந்த ஜனங்கள் அம்மிருகத்தின் ஒரு பாகத்தை உண்பார்கள். ஆனால் அதன் மார்புக்கண்டம் உங்களுக்கு உரியது. 15 ஜனங்கள் தங்கள் மிருகங்களின் கொழுப்பைப் பலியின் ஒரு பாகமாகக் கொண்டு வந்து பலிபீடத்தின் மேல் எரிக்க வேண்டும். அவர்கள் சமாதானப் பலிக்குரிய தொடையையும் அசைவாட்டும் பலிக்குரிய மார்புக்கண்டத்தையும் கொண்டு வர வேண்டும். அவை கர்த்தரின் சந்நிதானத்தில் அசைவாட்டப்படும். பின் அவை உங்களுக்கு உரிய பாகமாகக் கருதப்படும். கர்த்தர் சொன்னபடி பலியின் இப்பங்கானது என்றென்றைக்கும் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் உரியதாகும்” என்றான்.

16 மோசே பாவப்பரிகார பலிக்காகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டைத் தேடினான். ஆனால் அது ஏற்கெனவே எரிக்கப்பட்டிருந்தது. அதனால் மோசேக்கு ஆரோனின் மகன்கள் எலெயாசரிடமும், இத்தாமாரிடமும் மிகுந்த கோபம் ஏற்பட்டது. 17 மோசே, “நீங்கள் அந்த வெள்ளாட்டை பரிசுத்தமான இடத்தில் வைத்து உண்டிருக்க வேண்டும். அது மிகவும் பரிசுத்தமானது. ஏன் அதனை கர்த்தரின் சந்நிதானத்தில் வைத்து உண்ணாமற் போனீர்கள்? கர்த்தர் அதனை உங்களிடம், ஜனங்களின் குற்றங்களைப் போக்கி அவர்களைப் பரிசுத்தப்படுத்துவதற்காகவே கொடுத்துள்ளார். 18 அந்த வெள்ளாட்டின் இரத்தமானது பரிசுத்தமான இடத்திற்குள் கொண்டுவரப்படவில்லையே. நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதனைப் பரிசுத்த இடத்தில் வைத்து உண்டிருக்க வேண்டும்!” என்றான்.

19 ஆனால் ஆரோன் மோசேயிடம், “இன்றைக்கு அவர்கள் பாவப்பரிகார பலியையும், தகன பலியையும் கர்த்தருக்கு முன்னால் கொண்டு வந்தார்கள். ஆனால் எனக்கு இன்று என்ன ஏற்பட்டதென்று உங்களுக்குத் தெரியும்! பாவப்பரிகார பலிக்குரிய பாகத்தை நான் இன்று உண்டிருந்தால் கர்த்தர் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று எண்ணுகிறீரா?” என்றான்.

20 மோசே இவற்றைக் கேட்டதும் அமைதியாகிவிட்டான்.