Add parallel Print Page Options

யூதாவின் பகைவர்கள் தண்டிக்கப்படுவார்கள்

“ஆம் அந்த வேளையில், நான் யூதாவையும் எருசலேமையும் சிறையிருப்பிலிருந்து மீட்டுவருவேன். நான் அனைத்து நாட்டு ஜனங்களையும் ஒன்று சேர்ப்பேன். நான் யோசபாத்தின் பள்ளதாக்கிலே அனைத்து நாட்டு ஜனங்களையும் அழைத்து வருவேன். அங்கே நான் அவர்களை நியாயம் தீர்ப்பேன். அந்நாடுகள் என் இஸ்ரவேல் ஜனங்களைச் சிதறடித்தன. அவைகள் அவர்களை வேறு நாடுகளில் வாழும்படி வற்புறுத்தின. எனவே நான் அந்நாடுகளைத் தண்டிப்பேன். அந்நாடுகள் எனது நிலத்தை பிரித்தன. அவர்கள் எனது ஜனங்களுக்காகச் சீட்டுப் போட்டார்கள். அவர்கள் ஆண் குழந்தைகளை விபச்சாரிகளை வாங்குவதற்காக விற்றார்கள். அவர்கள் திராட்சைரசத்தை வாங்கிக் குடிப்பதற்காகப் பெண்குழந்தைகளை விற்றார்கள்.

“தீருவே, சீதோனே, பெலிஸ்தியாவின் அனைத்து எல்லைகளே, நீங்கள் எனக்கு முக்கியமானவர்கள் அல்ல. நான் செய்த ஏதோ சில காரியங்களுக்காக நீங்கள் என்னைத் தண்டிக்கப் போகிறீர்களா? என்னைத் தண்டித்துக்கொண்டிருப்பதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால், நான் உங்களை விரைவில் தண்டிப்பேன். நீங்கள் எனது பொன்னையும் வெள்ளியையும் எடுத்துக்கொண்டீர்கள். எனது விலையுயர்ந்த பொக்கிஷங்களைக் கொண்டுபோய் உங்கள் அந்நிய தெய்வங்களின் கோவில்களில் வைத்துக்கொண்டீர்கள்.

“நீங்கள் யூதா மற்றும் எருசலேம் ஜனங்களைக் கிரேக்கர்களுக்கு விற்றீர்கள். அவ்வாறு நீங்கள் அவர்களை அவர்கள் நாட்டிலிருந்து வெகுதூரம் கொண்டு செல்ல முடிந்தது. நீங்கள் எனது ஜனங்களை அத்தொலை தூர நாடுகளுக்கு அனுப்பினீர்கள். ஆனால் நான் அவர்களை மீண்டும் கொண்டுவருவேன். நான் உங்களை நீங்கள் செய்தவற்றுக்காகத் தண்டிப்பேன். நான் உங்களது மகன்களையும், மகள்களையும் யூத ஜனங்களுக்கு விற்கப்போகிறேன். பிறகு அவர்கள் உங்களைத் தொலைவிலுள்ள சபேயரிடத்தில் விற்பர்” என்று கர்த்தர் சொன்னார்.

போருக்காக ஆயத்தப்படுதல்

நாடுகளுக்கு இவற்றை அறிவியுங்கள்.
    போருக்குத் தயாராகுங்கள்.
வலிமையுள்ளவர்களை எழுப்புங்கள்.
    போர்வீரர்கள் எல்லோரும் நெருங்கி வரட்டும்.
    அவர்கள் மேலே வரட்டும்.
10 உங்கள் மண்வெட்டிகளை வாள்களாக அடியுங்கள்.
    உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகச் செய்யுங்கள்.
பலவீனமான மனிதன்
    “நான் வலிமையான போர்வீரன்” என்று சொல்லட்டும்.
11 அனைத்து நாட்டினரே, விரையுங்கள்.
    அந்த இடத்திற்குச் சேர்ந்து வாருங்கள்.
    கர்த்தாவே உமது வலிமையுள்ள வீரர்களைக் கொண்டுவாரும்.
12 நாடுகளே எழும்புங்கள்.
    யோசபாத்தின் பள்ளத்தாக்குக்கு வாருங்கள்.
சுற்றியுள்ள அனைத்து நாடுகளையும் நியாந்தீர்க்க
    நான் அங்கே உட்காருவேன்.
13 அரிவாளைக் கொண்டுவாருங்கள்.
    ஏனென்றால் அறுவடை தயாராகிவிட்டது.
வாருங்கள், திராட்சைகளை மிதியுங்கள்.
    ஏனென்றால் திராட்சை ஆலை நிரம்பியுள்ளது.
தொட்டிகள் நிரம்பி வழிகின்றன.
    ஏனென்றால் அவர்களின் தீமை பெரியது.

14 நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே ஏராளமான ஜனங்கள் இருக்கிறார்கள்.
    கர்த்தருடைய சிறப்புக்குரிய நாள்
விரைவில் வரும்.
    இது நியாயத்தீர்ப்பின் பள்ளதாக்கில் நடைபெறும்.
15 சூரியனும் சந்திரனும் இருண்டுவிடும்.
    நட்சத்திரங்கள் ஒளி வீசாமல் போகும்.
16 தேவனாகிய கர்த்தர் சீயோனிலிருந்தும் எருசலேமிலிருந்தும் சத்தமிடுவார்.
    ஆகாயமும் பூமியும் நடுங்கும்.
ஆனால் தேவனாகிய கர்த்தர் அவரது ஜனங்களுக்குப் பாதுகாப்பின் இடமாக இருப்பார்.
    அவர் இஸ்ரவேல் ஜனங்களுக்குப் பாதுகாப்பான இடமாக இருப்பார்.
17 “பின்னர் நீங்கள் நானே உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதை அறிவீர்கள்.
    நான் சியோனில் வசிக்கிறேன். அது எனது பரிசுத்தமான மலை.
எருசலேம் பரிசுத்தமாகும்.
    அந்நியர்கள் மீண்டும் அந்நகரத்தை ஊடுருவிச் செல்லமாட்டார்கள்.

யூதாவிற்கு ஒரு புதிய வாழ்க்கை வாக்களிப்பப்பட்டது

18 அந்த நாளில் மலைகள்
    இனிய திரட்சைரசத்தைப் பொழியும்.
குன்றுகளில் பால் வழிந்து ஓடும்.
    யூதாவின் வெறுமையான ஆறுகளில் தண்ணீர் நிரம்பி ஓடும்.
கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து நீரூற்று பெருக்கெடுக்கும்.
    அது அகாசியா பள்ளத்தாக்குக்கு தண்ணீரைக் கொடுக்கும்.
19 எகிப்து வெறுமையாகும்.
    ஏதோம் வெறுமையான பாலைவனமாகும்.
ஏனென்றால் அவை யூதா ஜனங்களுக்குக் கொடுமை செய்தன.
    அவை அவர்கள் நாட்டில் அப்பாவிகளைக் கொன்றார்கள்.
20 ஆனால் யூதாவில் எப்பொழுதும் ஜனங்கள் வாழ்வார்கள்.
    ஜனங்கள் எருசலேமில் பல தலை முறைகளுக்கு வாழ்வார்கள்.
21 அந்த ஜனங்கள் எனது ஜனங்களைக் கொன்றார்கள்.
    எனவே அந்த ஜனங்களை நான் உண்மையில் தண்டிப்பேன்!”
தேவனாகிய கர்த்தர் சீயோனில் வாழ்வார்.