Add parallel Print Page Options

14 யோபு, “நாமெல்லோரும் மனித ஜீவிகளே.
    நம் வாழ்க்கை குறுகியதும் தொல்லைகள் நிரம்பியதுமாகும்.
மனிதனின் வாழ்க்கை ஒரு மலரைப் போன்றது.
    அவன் விரைவாக வளருகிறான், பின்பு மடிந்துப் போகிறான்.
மனிதனின் வாழ்க்கை ஒரு நிழலைப் போன்றது.
    அது குறுகிய காலம் இருந்து, பின்பு மறைந்துப்போகும்.
அது உண்மையே, ஆனால் ஒரு மனிதனாகிய என்னை தேவன் நோக்கிப்பார்ப்பாரா?
    நீர் என்னோடு நியாய சபைக்கு வருவீரா?
அங்கு நாம் இருவரும் நம் விவாதங்களை முன் வைப்போம்.

“ஆனால் அழுக்குப்படிந்த ஒரு பொருளுக்கும்
    தூய்மையான ஒரு பொருளுக்குமிடையே இருக்கும் ஒற்றுமை என்ன? ஒன்றுமில்லை!
மனிதனின் வாழ்க்கை ஒரு எல்லை உடையது.
    தேவனே, ஒரு மனிதன் எத்தனைக் காலம் வாழ்கிறான் என்பதை நீர் முடிவு செய்கிறீர்.
    ஒரு மனிதனுக்கு அந்த எல்லைகளை நீர் முடிவெடுக்கிறீர், எதுவும் அதை மாற்றமுடியாது.
எனவே, தேவனே எங்களைக் கவனிப்பதை நிறுத்தும்.
    எங்களைத் தனித்துவிடும்.
    எங்கள் காலம் முடியும் வரைக்கும் எங்கள் கடின வாழ்க்கையை நாங்கள் வாழவிடும்.

“ஒரு மரத்திற்கும் நம்பிக்கை உண்டு.
    அது வெட்டப்பட்டால், மீண்டும் வளரக்கூடும்.
    அது புது கிளைகளைப் பரப்பியபடி நிற்கும்.
அதன் வேர்கள் பலகாலம் மண்ணிற்குள் வளரும்,
    அதன் அடிப்பகுதி புழுதியில் மடியும்.
ஆனால் தண்ணீரினால் அது மீண்டும் வளரும்.
    புதுச்செடியைப்போன்று அதில் கிளைகள் தோன்றும்.
10 ஆனால் மனிதன் மரிக்கும்போது, அவன் அழிந்து போகிறான்.
    மனிதன் மரிக்கும்போது, அவன் காணமற்போகிறான்.
11 நதிகள் வற்றிப்போகும்படியாகவும் கடல் தண்ணீர் முழுவதும் வற்றிப்போகும்படியாக தண்ணீர் இறைத்தாலும்
    மனிதன் மரித்தவனாகவேகிடப்பான்.
12 ஒருவன் மரிக்கும்போது அவன் படுத்திருக்கிறான், மீண்டும் எழுகிறதில்லை.
    அவர்கள் எழும்முன்னே வானங்கள் எல்லாம் மறைந்துபோகும்.
    ஜனங்கள் அந்த உறக்கத்திலிருந்து எழுவதேயில்லை.

13 “நீர் என் கல்லறையில் என்னை ஒளித்து வைப்பீரென விரும்புகிறேன்.
    நீர் உமது கோபம் ஆறும்வரை என்னை அங்கு ஒளித்து வைப்பீரென விரும்புகிறேன்.
    பின்பு என்னை நினைவுகூரும் காலத்தை நீர் தேர்ந்தெடுக்கலாம்.
14 ஒருவன் இறந்தால், அவன் மீண்டும் வாழ்வானா?
    நான் விடுதலையாகும்வரை எத்தனை காலமாயினும் காத்திருந்தேயாக வேண்டும்!
15 தேவனே, நீர் என்னைக் கூப்பிடுவீர்,
    நான் உமக்குப் பதில் தருவேன்,
நீர் என்னை சிருஷ்டித்தீர்,
    நான் உமக்கு முக்கியமானவன்.
16 நான் எடுக்கும் ஒவ்வோர் அடியையும் நீர் கண்ணோக்குகிறீர்.
    ஆனால், நீர் என் பாவங்களை நினைவுக்கூர்வதில்லை.
17 நீர் என் பாவங்களை ஒரு பையில் கட்டி வைப்பீர்.
    அதை முத்திரையிடும், அதை வீசியெறிந்துபோடும்!

18 “நொறுங்கிப்போகும்.
    பெரும் பாறைகள் தளர்ந்து உடைந்துவிழும்.
19 கற்களின் மீது பாயும் வெள்ளம் அவற்றைக் குடையும்.
    பெருவெள்ளம் நிலத்தின் மேற்பரப்புத்துகளை அடித்துச் (இழுத்து) செல்லும்.
    தேவனே, அவ்வாறே ஒருவனின் நம்பிக்கையை நீர் அழிக்கிறீர்.
20 அவனை முற்றிலும் தோற்கடித்து, பின்பு விலகிப் போகிறீர்.
    அவனைத் துயரங்கொள்ளச் செய்து, மரணத்தின் இடத்திற்கு என்றென்றைக்கும் அனுப்புகிறீர்.
21 அவன் மகன்கள் பெருமையடையும்போது, அவன் அதை அறியான்.
    அவன் மகன்கள் தவறுசெய்யும்போது, அவன் அதைக் காணான்.
22 அம்மனிதன் தனது உடம்பின் வலியை மட்டுமே உணருகிறான்,
    அவன் தனக்காக மட்டுமே உரக்க அழுகிறான்” என்றான்.