Add parallel Print Page Options

“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் ஒரு பாடல்.

58 நியாயாதிபதிகளாகிய நீங்கள் உங்கள் தீர்ப்புகளில் நியாயமானவர்களாக இருக்கவில்லை.
    நீங்கள் ஜனங்களுக்குச் சரியான நீதி வழங்கவில்லை.
நீங்கள் தீயகாரியங்களைச் செய்வதைக் குறித்தே எண்ணுகிறீர்கள்.
    இந்நாட்டில் நீங்கள் கொடிய குற்றங்களைச் செய்கிறீர்கள்.
அத்தீயோர் அவர்கள் பிறந்த உடனேயே தவறுகளைச் செய்ய ஆரம்பித்தார்கள்.
    பிறந்தது முதலே அவர்கள் பொய்யர்களாக வாழ்கிறார்கள்.
அவர்கள் பாம்புகளைப்போன்று ஆபத்தானவர்கள்.
    காதுகேளாத விரியன் பாம்புகளைப் போன்று, அவர்கள் உண்மையைக் கேட்க மறுக்கிறார்கள்.
பாம்பாட்டிகளின் இசையையோ, பாடல்களையோ, விரியன் பாம்புகளால் கேட்க முடிவதில்லை.
    அத்தீயோரும் அப்பாம்புகளைப் போன்றவர்களே.

கர்த்தாவே, அந்த ஜனங்கள் சிங்கங்களைப் போன்றவர்கள்.
    எனவே கர்த்தாவே, அவர்கள் பற்களை உடைத்துவிடும்.
வழிந்தோடுகிற தண்ணீரைப்போன்று அந்த ஜனங்கள் மறைந்துபோகட்டும்.
    பாதையின் களைகளைப்போல் அவர்கள் சிதைக்கப் படட்டும்.
அவர்கள், அசையும்போதெல்லாம் கரைந்து போகிற நத்தையைப் போலாகட்டும்.
    அவர்கள் பகலின் ஒளியைக் காணாமல் பிறக்கும்போதே மரித்துப்போன குழந்தையைப்போல இருக்கட்டும்.
நெருப்பில் வைக்கப்படும் பானையைச் சூடேற்றுவதற்காக
    விரைந்து எரியும் முட்களைப்போன்று அவர்கள் விரைவில் அழியட்டும்.

10 நல்லவனுக்குத் தீமைசெய்த ஜனங்கள் தண்டிக்கப்படுவதை, அவன் பார்க்கையில் மகிழ்ச்சியடைவான்.
    அக்கெட்ட மனிதர்களின் இரத்தத்தால் அவன் தனது பாதங்களைக் கழுவுவான்.
11 அவ்வாறு நிகழும்போது, ஜனங்கள், “நல்லோர் உண்மையிலேயே பயன்பெறுவர்,
    உலகை நியாயந்தீர்க்கும் தேவன் உண்மையாகவே இருக்கிறார்” என்பார்கள்.