Add parallel Print Page Options

கர்த்தர் இஸ்ரவேலுக்கு எதிராகக் கோபமாயிருக்கிறார்

இஸ்ரவேல் ஜனங்களே கர்த்தருடைய செய்தியைக் கேளுங்கள். கர்த்தர் இந்த நாட்டில் வாழ்கிற ஜனங்களுக்கு எதிராகத் தன் வாதங்களைச் சொல்லுவார். “இந்நாட்டிலுள்ள ஜனங்கள் உண்மையில் தேவனை அறிந்துகொள்ளவில்லை. தேவனுக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இல்லை. ஜனங்கள் பொய்யாணையும், பொய்யும், கொலையும், திருட்டும் செய்கின்றார்கள். அவர்கள் விபச்சாரமும் செய்கின்றனர். அதனால் குழந்தைகளையும் வைத்திருக்கின்றார்கள். ஜனங்கள் மீண்டும் மீண்டும் கொலை செய்கின்றனர். எனவே. அந்த நாடானது ஒரு மனிதன் செத்தவர்களுக்காக புலம்புவதுபோல் இருக்கிறது, அதன் ஜனங்கள் அனைவரும் பலவீனமுடையவர்களாக இருக்கின்றனர். காடுகளில் உள்ள மிருகங்களும் வானத்து பறவைகளும்கடலிலுள்ள மீன்களும் மரித்துக்கொண்டிருக்கின்றன. எவனொருவனும் இன்னொருவனோடு வாதம் செய்வதோ அல்லது பழி சொல்லவோ கூடாது, ஆசாரியரே, எனது வாதம் உங்களோடு உள்ளது, நீங்கள் (ஆசாரியர்கள்) பகல் நேரத்தில் இடறி விழுவீர்கள். இரவில் தீர்க்கதரிசியும் உங்கேளாடு விழுவான். நான் உங்கள் தாயை அழிப்பேன்.

“எனது ஜனங்கள் அழிக்கப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அறிவில்லை. நீ கற்றுக்கொள்ள மறுத்திருக்கிறாய். எனவே, நீ எனக்கு ஆசாரியனாக இருக்கிறதை நான் மறப்பேன். நீ உனது தேவனுடைய சட்டங்களை மறந்திருக்கிறாய். எனவே நான் உன் பிள்ளைகளை மறப்பேன். அவர்கள் தற்பெருமை கொண்டார்கள். அவர்கள் எனக்கு எதிராக மேலும் மேலும் பாவங்கள் செய்தார்கள். எனவே நான் அவர்களது மகிமையை அவமானமாக்குவேன்.

“ஆசாரியர்கள் ஜனங்களின் பாவத்தில் சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் அப்பாவங்களை மேலும் மேலும் விரும்பினார்கள். எனவே, ஆசாரியர்கள் எவ்விதத்திலும் ஜனங்களை விட வித்தியாசமானவர்களாக இல்லை. நான் அவர்களை அவர்கள் செய்த தவற்றுக்காகத் தண்டிப்பேன். அவர்கள் செய்த தீயச்செயல்களுக்காக அதற்குரிய பலனை அளிப்பேன். 10 அவர்கள் உண்பார்கள். ஆனால் அது அவர்களுக்குத் திருப்தியைத் தராது. அவர்கள் பாலினஉறவு பாவத்தை செய்வார்கள். ஆனால் குழந்தைகள் பெறமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் கர்த்தரை விட்டு விலகி விபச்சாரிகளைப் போன்று ஆகிவிட்டார்கள்.

11 “வேசித்தனமும், பலமான குடியும். புதிய திராட்சைரசமும் ஒருவனின் சிந்தனைச் சக்தியை அழித்துவிடும், 12 எனது ஜனங்கள் மரக்கட்டைகளிடம் ஆலோசனை கேட்கின்றார்கள், அவர்கள் அக்கட்டைகள் பதில் சொல்லும் என்று எண்ணுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் வேசிகளைப்போன்று அந்நியத் தெய்வங்களை துரத்திக்கொண்டு போயிருக்கிறார்கள், அவர்கள் தமது தேவனை விட்டு விட்டு வேசிகளைப் போன்று ஆனார்கள். 13 அவர்கள் மலைகளின் உச்சியில் பலிகளைக் கொடுக்கிறார்கள். அவர்கள் கர்வாலி மரங்கள், புன்னைமரங்கள், அரசமரங்கள் ஆகியவற்றின் கீழே நறுமணத்தூபங்களை எரிக்கிறார்கள் அம்மரங்களின் நிழல்கள் பார்க்கையில் அழகாக இருக்கின்றன. எனவே உங்கள் மக்கள் விபச்சாரிகளைப்போன்று அம்மரங்களுக்கு அடியில் படுத்துக்கொள்கின்றனர். உங்கள் மருமகள்களும் விபச்சாரம் செய்கின்றார்கள்.

14 “நான் உங்கள் மகள்கள் வேசிகளைப் போன்று நடந்துக்கொள்வதையும் உங்கள் மருமகள்கள் விபச்சாரம் செய்வதையும் குற்றம் சொல்லமாட்டேன். ஆண்கள் போய் வேசிகளோடு படுத்துக்கொள்கின்றார்கள். அவர்கள் கோவில் வேசிகளோடு பலிகள் இடுகின்றார்கள். எனவே அம்முட்டாள் ஜனங்கள் தம்மைத்தாமே அழித்துகொள்கின்றார்கள்.

இஸ்ரவேலர்களின் அவமானத்துக்குரிய பாவங்கள்

15 “இஸ்ரவேலே, நீ ஒரு வேசியைப் போன்று நடந்துக்கொள்கிறாய். ஆனால் யூதாவை அக்குற்றத்துக்கு ஆளாக்காதே. கில்காலுக்குப் போகாதே. பெத்தாவேனுக்கும் போகாதே. ஆணையிடுவதற்குக் கர்த்தருடைய நாமத்தைப் பயன்படுத்தாதே. ‘கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு...’ என்று ஆணையிடாதே. 16 கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஏராளமானவற்றைக் கொடுத்திருக்கிறார். அவர் தம் ஆடுகளை ஏராளம் புல்லுள்ள சமவெளிக்குக் கூட்டிப்போகும் நல்ல மேய்ப்பனைப் போன்றவர். ஆனால் இஸ்ரவேல் பிடிவாதமாக இருக்கிறது. இஸ்ரவேல் அடங்காமல் மீண்டும் மீண்டும் ஓடும் கன்றுக் குட்டியைப் போன்றிருக்கிறது.

17 எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான். எனவே அவனைத் தனியே விட்டுவிடு. 18 “எப்பிராயீம் குடித்தவர்களோடு சேர்ந்துகொண்டு விபசாரிகளைப்போல செயல்படுகிறான். அவர்கள் தங்கள் நேசர்களுடன் இருக்கட்டும். 19 அவர்கள் அத்தேவர்களிடம் பாதுகாப்புக்காகச் சென்றார்கள். அவர்கள் தம் சிந்தனையின் வலிமையை இழந்துவிட்டார்கள். அவர்களது பலிகள் அவர்களுக்கு அவமானத்தைக் கொண்டு வருகின்றன”.