Add parallel Print Page Options

எகிப்திலுள்ள யூதா ஜனங்களுக்கு கர்த்தருடைய வார்த்தை

44 கர்த்தரிடமிருந்து எரேமியா ஒரு வார்த்தையைப் பெற்றான். எகிப்தில் வாழுகிற அனைத்து யூதா ஜனங்களுக்கும் இந்த வார்த்தை உரிதானது. இந்த வார்த்தை மிக்தோல், தக்பானேஸ், நோப்பில், பத்ரோன் போன்ற இடங்களில் வாழும் யூதாவின் ஜனங்களுக்கானது. இதுதான் செய்தி: “இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுவதாவது, ‘ஜனங்களாகிய நீங்கள் யூதாவின் நகரங்களிலும் எருசலேமிலும் நான் ஏற்படுத்திய பயங்கரமானவற்றைப் பார்த்தீர்கள். அந்த நகரங்கள் எல்லாம் இன்று காலியான கற்தூண்களாக உள்ளன. அந்த இடங்கள் எல்லாம் அழிக்கப்பட்டன. ஏனென்றால், அதில் வாழ்ந்த ஜனங்கள் கெட்டவற்றைச் செய்தனர். அவர்கள் அந்நிய தெய்வங்களுக்கு பலிகளைக் கொடுத்தனர். அது எனக்குக் கோபத்தைத் தந்தது. கடந்த காலத்தில் நீங்களும் உங்கள் முற்பிதாக்களும் அத்தெய்வங்களைத் தொழுதுகொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் எனது தீர்க்கதரிசிகளை அவர்களிடம் அனுப்பினேன். அத்தீர்க்கதரிசிகள் எனது வேலைக்காரர்களாக இருந்தனர். அத்தீர்க்கதரிசிகள் எனது செய்திகளைப் பேசினார்கள். அந்த ஜனங்களிடம், “இப்பயங்கரமானவற்றைச் செய்யாதீர்கள். விக்கிரகங்களை நீங்கள் வழிபடுவதை நான் வெறுக்கிறேன்” என்றனர். ஆனால் அந்த ஜனங்கள் தீர்க்கதரிசிகள் சொன்னதைக் கேட்கவில்லை. அவர்கள் அத்தீர்க்கதரிசிகளிடம் தம் கவனத்தைச் செலுத்தவில்லை. அந்த ஜனங்கள் கெட்டவற்றைச் செய்வதை நிறுத்தவில்லை. அவர்கள் அந்நிய தெய்வங்களுக்கு பலிகள் கொடுப்பதை நிறுத்தவில்லை. எனவே நான் அந்த ஜனங்களுக்கு எதிராக என் கோபத்தைக் காட்டினேன். நான் யூதாவின் பட்டணங்களையும் எருசலேமின் தெருக்களையும் தண்டித்தேன். எனது கோபம், எருசலேமையும் யூதாவின் பட்டணங்களையும் இன்றைக்குள்ள வெறுமையான கற்குவியல்களாக்கிவிட்டது.’”

எனவே, “இஸ்ரவேலின் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் கூறுகிறார். ‘தொடர்ந்து விக்கிரகங்களைத் தொழுதுக்கொண்டு நீங்கள் உங்களையே ஏன் காயப்படுத்திக்கொள்கிறீர்கள். நீங்கள் ஆண்களையும் பெண்களையும் சிறுவர்களையும் குழந்தைகளையும் யூதாவின் வம்சத்திலிருந்து பிரித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களை ஒன்றுமில்லாதவர்களைபோல ஆக்க நீங்களே காரணமாகுகிறீர்கள். ஜனங்களாகிய நீங்கள் விக்கிரகங்களைச் செய்து எனக்கு ஏன் கோபத்தை உண்டுப்பண்ணுகிறீர்கள்? இப்பொழுது நீங்கள் எகிப்தில் வாழ்கிறீர்கள். எகிப்திலுள்ள பொய்த் தெய்வங்களுக்கு பலிகள் கொடுப்பதன் மூலம் இப்போது நீங்கள் என்னைக் கோபமூட்டிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்களையே அழிப்பீர்கள். இது உங்களுடைய தவறு. நீங்கள் எல்லா ஜாதிகள் மத்தியிலும் ஒரு சாபச் சொல்லாகவும், அவமானப்பட்டவர்களாகவும் ஆவீர்கள். அடுத்த நாட்டு ஜனங்கள் அதைக் கெட்டதாகப் பேசுவார்கள். பூமியில் உள்ள மற்ற நாட்டினர் உங்களை கேலி செய்வார்கள். உங்கள் முற்பிதாக்கள் செய்த பொல்லாப்புகளை நீங்கள் மறந்துவிட்டீர்களா? யூதாவின் அரசர்களும் அரசிகளும் செய்த பொல்லாப்புகளை மறந்து விட்டீர்களா? யூதாவிலும் எருசலேம் வீதிகளிலும் நீங்களும் உங்கள் மனைவியரும் செய்த பொல்லாப்புகளை மறந்துவிட்டீர்களா? 10 இந்த நாளிலும் கூட யூதாவின் ஜனங்கள் தங்களைத் தாங்கள் தாழ்த்திக்கொள்ளவில்லை. அவர்கள் எனக்கு எவ்வித மரியாதையும் செய்யவில்லை. அந்த ஜனங்கள் எனது போதனைகளைப் பின்பற்றவில்லை. நான் உங்களுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் கொடுத்த சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை.’

11 “எனவே, இதுதான் இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்வது: ‘உங்களுக்கு பயங்கரமானவை நிகழவேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். யூதாவின் வம்சம் முழுவதையும் நான் அழிப்பேன். 12 உயிர் பிழைத்தவர்கள் சிலர் மட்டுமே உள்ளனர். அந்த ஜனங்களும் எகிப்துக்கு வந்தனர். யூதாவின் வம்சத்திலுள்ள அந்த சிலரையும் நான் அழிப்பேன். அவர்கள் வாளால் கொல்லப்படுவார்கள் அல்லது பசியால் மரிப்பார்கள். அவர்களுக்கு நடப்பதைக் கேள்விப்பட்டு மற்ற நாடுகள் அஞ்சும். மற்றவர்கள் அவரை சபித்து நிந்தனைக்குள்ளாக்கிடுவார்கள். அந்த யூதா ஜனங்களை அவர்கள் அவமதிப்பார்கள். 13 எகிப்தில் வாழ்வதற்குப் போன அந்த ஜனங்களை நான் தண்டிப்பேன். நான் வாள்கள், பசி மற்றும் பயங்கரமான நோய்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவர்களைத் தண்டிப்பேன். நான் எருசலேம் நகரத்தைத் தண்டித்ததுபோன்று அந்த ஜனங்களை நான் தண்டிப்பேன். 14 யூதாவிலிருந்து தப்பிப் பிழைத்து எகிப்திற்கு வாழப் போனவர்களில் ஒருவர் கூட எனது தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. அந்த ஜனங்கள் யூதாவிற்குத் திரும்பி வந்து அங்கே வாழ விரும்புகின்றனர். ஆனால் ஒருவரும் யூதாவுக்குத் திரும்பிப் போகமாட்டார்கள். ஒருவேளை சிலர் மட்டும் தப்பித்துக்கொள்ளலாம்.’”

15 யூதாவின் பெண்களில் பலர் எகிப்தில் வாழும்போது அந்நிய தெய்வங்களுக்குப் பலிகள் கொடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களது கணவர்களுக்கு இது தெரியும். ஆனால் அவர்களை தடுத்து நிறுத்தவில்லை. யூதாவின் ஜனங்களில் பெரிய கூட்டத்தினர் ஒன்று கூடுகின்றனர். அவர்கள் எகிப்தின் தென்பகுதியில் வாழுகின்ற யூதா ஜனங்களாவார்கள். மற்ற தெய்வங்களுக்கு பலிகள் கொடுத்துக்கொண்டிருக்கிற அப்பெண்களின் கணவர்கள் எரேமியாவிடம், 16 “நீ எங்களுக்குச் சொன்ன கர்த்தருடைய வார்த்தையை நாங்கள் கேட்கமாட்டோம். 17 வானராக்கினிக்கு பலிகள் கொடுப்பதாக நாங்கள் வாக்குறுதி கொடுத்திருக்கிறோம். நாங்கள் வாக்குறுதி அளித்தபடி எல்லாவற்றையும் செய்வோம். நாங்கள் அவளைத் தொழுதுகொள்ள பலிகள் கொடுப்போம். பானங்களின் காணிக்கையை ஊற்றுவோம். நாங்கள் இதனைக் கடந்த காலத்தில் செய்தோம். எங்கள் முற்பிதாக்கள், எங்கள் அரசர்கள், எங்கள் அதிகாரிகள் கடந்த காலத்தில் இதனைச் செய்தனர். யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் தெருக்களிலும் நாங்கள் அவற்றைச் செய்தோம். சொர்க்கத்தின் அரசியை நாங்கள் தொழுதுவந்த அந்நேரத்தில் எங்களிடம் நிறைய உணவு இருந்தது. நாங்கள் வெற்றிகரமாக இருந்தோம். கெட்டவை எதுவும் நடக்கவில்லை. 18 ஆனால் நாங்கள் வானராக்கினிக்கு தொழுதுகொள்வதை நிறுத்தினோம். அவளுக்குப் பானப் பலிகள் ஊற்றுவதை நிறுத்தினோம். அவளுக்கு தொழுகைகள் செய்வதை நிறுத்தியதிலிருந்து எங்களுக்குப் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கின்றன. எங்களது ஜனங்கள் வாள்களாலும் பசியாலும் கொல்லப்பட்டிருக்கின்றனர்” என்றனர்.

19 பிறகு பெண்கள் பேசினார்கள். அவர்கள் எரேமியாவிடம், “நாங்கள் செய்துக்கொண்டிருந்ததை எங்கள் கணவர்கள் அறிவார்கள். வானராக்கினிக்கு பலிகள் கொடுக்க எங்களுக்கு அவர்களின் அனுமதி இருந்தது. அவளுக்குப் பானங்களின் காணிக்கை ஊற்ற எங்களுக்கு அவர்களின் அனுமதி இருந்தது. அவளைப் போன்ற அப்பங்களை நாங்கள் செய்துக்கொண்டிருந்ததை எங்கள் கணவர்களும் அறிவார்கள்” என்றனர்.

20 பிறகு எரேமியா எல்லா ஆண்கள் மற்றும் பெண்களுடன் பேசினான். இவற்றையெல்லாம் இப்பொழுதுதான் சொன்ன அவர்களுடன் எரேமியா பேசினான். 21 எரேமியா அந்த ஜனங்களிடம், “யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் நீங்கள், பலிகள் செய்ததை கர்த்தர் நினைவுப்படுத்தினார். நீங்களும் உங்கள் முற்பிதாக்களும், உங்கள் அரசர்களும், உங்கள் அதிகாரிகளும், தேசத்தின் ஜனங்களும் இதனைச் செய்தனர். நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை கர்த்தர் நினைவுப்படுத்தினார். அதைப்பற்றி நினைத்தார். 22 பிறகு கர்த்தருக்கு உங்களோடு அதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. நீங்கள் செய்த பயங்கரமான காரியங்களை கர்த்தர் வெறுத்தார். எனவே கர்த்தர் தேசத்தைக் காலியான வனாந்தரமாக்கினார். இப்பொழுது அங்கே எவரும் வாழவில்லை. மற்றவர்கள் அத்தேசத்தைப் பற்றி அருவருப்பாகப் பேசுகிறார்கள். 23 அந்த தீமையெல்லாம் உங்களுக்கு ஏற்பட்டன. ஏனென்றால், நீங்கள் அந்நிய தெய்வங்களுக்குப் பலிகள் கொடுத்தீர்கள். கர்த்தருக்கு எதிராக நீங்கள் பாவம் செய்தீர்கள். நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை. நீங்கள் அவரது போதனைகளையும் அவர் உங்களுக்குக் கொடுத்த சட்டங்களையும் பின்பற்றவில்லை. உங்கள் உடன்படிக்கையின் பகுதியை நீங்கள் பாதுகாக்கவில்லை” என்று பதிலளித்தான்.

24 பிறகு எரேமியா எல்லா ஆண்கள் மற்றும் பெண்களிடமும் பேசினான். எரேமியா சொன்னான், “யூதா ஜனங்களாகிய நீங்கள், இப்பொழுது எகிப்தில் இருக்கிறீர்கள். கர்த்தருடைய வார்த்தையை கவனியுங்கள்: 25 இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: ‘பெண்களாகிய நீங்கள் சொன்னதையே செய்தீர்கள். நீங்கள், “நாங்கள் செய்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவோம். பலிகள் கொடுப்பதாகவும் பானபலி ஊற்றுவதாகவும் வாக்குறுதி அளித்தோம்” என்றீர்கள். எனவே அவ்வாறே செய்யுங்கள். நீங்கள் செய்வதாக வாக்குறுதி கொடுத்தவற்றைச் செய்துவிடுங்கள். உங்கள் வாக்குறுதிகளைக் காப்பாற்றுங்கள்.’ 26 ஆனால் கர்த்தரிடமிருந்து வந்த வார்த்தையைக் கேளுங்கள். எகிப்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிற யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களே! ‘நான் எனது பெரும் பெயரைப் பயன்படுத்தி இந்த வாக்குறுதியைச் செய்கிறேன். யூதாவிலுள்ள ஜனங்களில் எகிப்தில் இப்பொழுது வாழ்ந்துக்கொண்டிருக்கிற எவரும் என் நாமத்தால் மீண்டும் வாக்குறுதி செய்யமாட்டார்கள் என்று நான் வாக்குறுதி அளிக்கிறேன். அவர்கள் மீண்டும் “இதோ கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு…” என்று சத்தியம் செய்யமாட்டார்கள். 27 நான் யூதாவின் ஜனங்கள் மேல் கவனமாயிருக்கிறேன். ஆனால் நான் அவர்களின் மேல் நன்மைக்காக கவனித்துக்கொண்டிருக்கவில்லை. நான் அவர்கள் மேல் தீமை செய்வதற்காகவே கவனித்துக்கொண்டிருக்கிறேன். எகிப்தில் வாழ்கிற யூதாவின் ஜனங்கள் பசியால் மரிப்பார்கள், அவர்கள் பட்டயத்தால் கொல்லப்படுவார்கள். அவர்கள் முடிந்து போகும்வரை தொடர்ந்து மரித்துக்கொண்டிருப்பார்கள். 28 யூதா ஜனங்களில் சிலர் வாளால் கொல்லப்படுவதிலிருந்து தப்புவார்கள். அவர்கள் எகிப்திலிருந்து யூதாவிற்குத் திரும்பி வருவார்கள். ஆனால் தப்பி வருகிற யூதாவின் ஜனங்கள் மிகச் சிலராக இருப்பார்கள். பிறகு தப்பிப்பிழைத்த அந்த யூதா ஜனங்கள், எகிப்தில் வாழ்பவர்கள், யாருடைய வார்த்தை உண்மையாகிறது என்பதை அறிந்துக்கொள்வார்கள். எனது வார்த்தையா? அல்லது அவர்களின் வார்த்தையா? எது உண்மையானது என்பதை அவர்கள் அறிவார்கள். 29 நான் உங்களுக்கு அடையாளத்தைத் தருவேன்’ இது கர்த்தருடைய வார்த்தை, ‘எகிப்தில் நான் உங்களைத் தண்டிப்பேன். பிறகு நான் உங்களைத் தண்டிப்பேன் என்ற எனது வாக்கு உண்மையாக நடப்பதை நீங்கள் அறிவீர்கள். 30 நான் என்ன சொன்னேனோ அதைச் செய்வேன் என்பதற்கு இதுவே உங்களது சான்றாகும்’ கர்த்தர் சொல்லுவது என்னவெனில், ‘பார்வோன் ஒப்பிரா எகிப்தின் அரசன். அவனது பகைவர்கள் அவனைக் கொல்ல விரும்புகின்றனர். நான் பார்வோன் ஒப்பிராவை அவனது பகைவர்களிடம் கொடுப்பேன். யூதாவின் அரசனாக சிதேக்கியா இருந்தான். நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவின் பகைவனாக இருந்தான். நான் சிதேக்கியாவை அவனது பகைவனிடம் கொடுத்தேன். அதே வழியில் நான் பார்வோன் ஒப்பிராவை அவனது பகைவரிடம் கொடுப்பேன்’” என்று சொன்னான்.