Add parallel Print Page Options

பின்னர் தேவன், தண்டனைக்குப் பொறுப்பாக இருந்த தலைவர்களிடம் சத்தமிட்டார். ஒவ்வொரு தலைவரும் தமது கையில் கொலைக்குரிய ஆயுதங்களை வைத்திருந்தனர். பிறகு உயர்ந்த வாசலிலிருந்து ஆறு மனிதர்கள் சாலையில் நடந்து வருவதை நான் பார்த்தேன். அவ்வாசல் வடபகுதியில் இருக்கிறது. ஒவ்வொருவரும் தமது கையில் வெட்டுகிற ஆயுதத்தை வைத்திருந்தனர். ஒரு மனிதன் சணல் நூல் ஆடை அணிந்திருந்தான். அவன் தன் இடுப்பில் நகலரின் எழுது கோலையும் மைக்கூட்டையும் வைத்திருந்தான். அம்மனிதர்கள் ஆலயத்தில் உள்ள வெண்கல பலிபீடத்தின் அருகில் நின்றனர். பிறகு இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கேருபீன் மேலிருந்து எழும்பியது. பிறகு அந்த மகிமை ஆலயத்தின் வாசலுக்குச் சென்றது. அங்கே நின்று, அம்மகிமை சணல் நூலாடை அணிந்து மைக்கூடும் எழுதுகோலும் வைத்திருக்கிற மனிதனைக் கூப்பிட்டது.

பிறகு அவனிடம் கர்த்தர் (மகிமை) சொன்னார்: “எருசலேம் நகரத்தின் வழியாகப் போ. நகரில் ஜனங்கள் செய்யும் எல்லா பயங்கரமான காரியங்களையும் பற்றி பெருமூச்சுவிட்டு அழுகிறவர்களின் நெற்றிகளில் அடையாளம் போடு.”

5-6 பிறகு தேவன் மற்றவர்களிடம் கூறுகிறதைக் கேட்டேன்: “நீங்கள் முதல் மனிதனைப் பின்பற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன். தன் நெற்றியில் அடையாளம் இல்லாத ஒவ்வொருவரையும் நீங்கள் கொல்லவேண்டும். நீங்கள் யார் மேலும் பரிதாபப்படவேண்டாம். நெற்றியில் அடையாளம் இல்லாத மூப்பர்கள் (தலைவர்கள்) இளைஞர்கள், இளம் பெண்கள், குழந்தைகள், பிள்ளைகள் தாய்மார்கள் உள்பட எல்லோரையும் கொல்லுங்கள். உங்கள் ஆயுதங்களால் அவர்களைக் கொல்லவேண்டும். அவர்களிடம் இரக்கம் காட்டவேண்டாம். எவருக்காகவும் வருத்தப்படவேண்டாம். எனது ஆலயத்திலிருந்தே தொடங்குங்கள்.” எனவே, ஆலயத்தின் முன்னாலிருந்து மூப்பர்களோடு ஆரம்பித்தார்கள்.

தேவன் அவர்களிடம் சொன்னார்: “இந்த ஆலயத்தை தீட்டுப்படுத்துங்கள். இப்பிரகாரங்களை மரித்த உடல்களால் நிரப்புங்கள்! இப்பொழுது போங்கள்!” எனவே, அவர்கள் நகருக்குள் போய் ஜனங்களைக் கொன்றார்கள்.

அம்மனிதர்கள் போய் ஜனங்களைக் கொல்லும்போது நான் அங்கே தங்கினேன். நான் என் முகம் தரையில் படும்படிக் குனிந்து வணங்கிச் சொன்னேன். “எனது கர்த்தராகிய ஆண்டவரே, எருசலேமின் மீது தனது கோபத்தைக் காட்டுகிறவரே, இஸ்ரவேலில் தப்பிப் பிழைத்த அனைவரையும் கொல்லப் போகிறீரா?”

தேவன் சொன்னார்: “இஸ்ரவேல் வம்சத்தாரும் யூதா வம்சத்தாரும் மிகவும் மோசமான பாவங்களைச் செய்திருக்கின்றனர்! நாட்டில் ஒவ்வொரு இடங்களிலும் ஜனங்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். நகரம் குற்றங்களால் நிறைந்திருக்கின்றது. ஏனென்றால், ஜனங்கள் தங்களுக்குள் ‘கர்த்தர் நாட்டை விட்டு விலகினார். நாம் செய்கின்றவற்றை அவரால் பார்க்க முடியாது’ என்று கூறுகின்றனர். 10 நான் எவ்வித இரக்கமும் காட்டமாட்டேன். நான் இந்த ஜனங்களுக்காக வருத்தப்படமாட்டேன். அவர்கள் இதனைத் தாமாகவே கொண்டுவந்தனர். நான் அவர்களுக்கு ஏற்ற தண்டனையையே கொடுக்கிறேன்!”

11 பிறகு சணல் நூலாடை அணிந்து நகலரின் எழுது கோலும் மைக்கூடும் வைத்திருந்தவன் பேசினான். அவன், “நீர் கட்டளையிட்டபடி நான் செய்திருக்கிறேன்” என்றான்.