Add parallel Print Page Options

கோகும் அவனது படையும் மரணமடைதல்

39 “மனுபுத்திரனே, எனக்காகக் கோகிற்கு விரோதமாகப் பேசு. கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார் என்று அவனிடம் சொல், ‘கோகே, நீ மேசேக், தூபால் ஆகிய இரு நாடுகளிலும் மிக முக்கியமான தலைவன்! ஆனால், நான் உனக்கு விரோதமானவன். நான் உன்னைக் கைப்பற்றி இங்கே கொண்டு வருவேன். நான் உன்னை வட திசையிலிருந்து கொண்டுவருவேன். நான் உன்னை இஸ்ரவேலின் மலைகளுக்கு விரோதமாகப் போரிட அழைப்பேன். ஆனால் நான் உனது இடது கையிலுள்ள வில்லைத் தட்டிவிடுவேன். நான் உனது வலது கையிலுள்ள அம்புகளைத் தட்டிவிடுவேன். நீ இஸ்ரவேலின் மலைகளில் கொல்லப்படுவாய். அப்போரில் நீயும் உன்னோடுள்ள படை வீரர்களும், உன்னோடுள்ள பிற நாட்டவர்களும் கொல்லப்படுவார்கள். நான் உங்களை இறைச்சியைத் தின்னுகிற எல்லாவகைப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் உணவாகக் கொடுப்பேன். நீ நகரத்திற்குள் நுழையமாட்டாய். நீ வெளியே திறந்த வெளியில் கொல்லப்படுவாய். நான் சொன்னேன்!’” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார்.

தேவன் சொன்னார்: “நான் மாகோகுக்கு விரோதமாகவும் தீவுகளில் பாதுகாப்பாக வாழ்கிற ஜனங்களுக்கு விரோதமாகவும் நெருப்பை அனுப்புவேன். பிறகு அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள். நான் எனது பரிசுத்தமான நாமம் இஸ்ரவேல் ஜனங்களிடம் தெரியும்படிச் செய்வேன். நான் இனிமேல் என் நாமத்தை ஜனங்கள் அழிக்கும்படி விடமாட்டேன். நானே கர்த்தர் என்பதை நாடுகள் அறியும். நான் இஸ்ரவேலில் பரிசுத்தமானவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். அந்தக் காலம் வருகின்றது! இது நிகழும்!” கர்த்தர் இவற்றைச் சொன்னார்: “நான் பேசுகிறது அந்த நாளைப்பற்றித்தான்.

“அந்த நேரத்தில், இஸ்ரவேல் நகரங்களில் வாழ்கின்ற ஜனங்கள் வயல்களைவிட்டு வெளியே செல்வார்கள். அவர்கள் பகைவர்களின் ஆயுதங்களைப் பொறுக்கி அவற்றை எரிப்பார்கள். அவர்கள் எல்லா கேடயங்களையும், வில்லம்புகளையும், வளை தடிகளையும், ஈட்டிகளையும் எரிப்பார்கள். அவர்கள் ஏழு ஆண்டுகளுக்கு அவற்றை விறகாகப் பயன்படுத்துவார்கள். 10 அவர்கள் வயல்களில் விறகு பொறுக்குவதையோ அல்லது காடுகளில் விறகு வெட்டவோமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் ஆயுதங்களை விறகாகப் பயன்படுத்துவார்கள். அவர்கள் தம்மைக் கொள்ளையிட்ட வீரர்களிடமிருந்து விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடிப்பார்கள். தங்களிடமிருந்து நல்ல பொருட்களைச் சூறையாடியவர்களிடமிருந்து, நல்ல பொருட்களை அவர்கள் சூறையாடுவார்கள்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

11 தேவன் சொன்னார்: “அந்நாளில், நான் இஸ்ரவேலில் கோகைப் புதைக்கிற இடத்தைத் தேர்ந்தெடுப்பேன். அவன், சவக் கடலின் கிழக்கே பயணக்காரர்களின் பள்ளத்தாக்கில் புதைக்கப்படுவான். அது பயணிகளின் வழியை அடைக்கும். ஏனென்றால், கோகும் அவனது படையும் அந்த இடத்தில் புதைக்கப்படுவார்கள். ஜனங்கள் இதனை ‘ஆமோன் கோகின் பள்ளத்தாக்கு’ என்று அழைப்பார்கள். 12 இஸ்ரவேல் வம்சத்தார் அவர்களை புதைத்து பூமியைச் சுத்தப்படுத்த ஏழு மாதங்கள் ஆகும். 13 பொது ஜனங்கள் அந்த பகைவீரர்களைப் புதைப்பார்கள். நானே எனக்கு மகிமைக் கொண்டுவரும், அந்த நாளில் அவர்கள் புகழடைவார்கள்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றை கூறினார்.

14 தேவன் சொன்னார்: “ஜனங்கள் வேலைக்காரர்களுக்கு மரித்த வீரர்களைப் புதைக்க முழுநாள் வேலையைக் கொடுப்பார்கள். இவ்வாறு, அவர்கள் பூமியைச் சுத்தம் செய்தார்கள். வேலைக்காரர்கள் ஏழு மாதங்கள் வேலைசெய்வார்கள். அவர்கள் மரித்த உடல்களைத் தேடி சுற்றிலும் அலைவார்கள். 15 அவ்வேலைக்காரர்கள் தேடியலைவார்கள். அவர்களில் ஒருவன் எலும்பைப் பார்த்தால் அவன் அதில் ஒரு அடையாளம் இடுவான். அந்த அடையாளமானது கல்லறைக்குழி தோண்டுகிறவர்கள் வந்து அந்த எலும்பை கோகின் பள்ளத்தாக்கில் புதைக்கும்வரை இருக்கும். 16 மரித்த ஜனங்களின் நகரமானது ஆமோனா என்று அழைக்கப்படும். இவ்வாறு அவர்கள் நாட்டைத் தூய்மைப்படுத்துவார்கள்.”

17 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: “மனுபுத்திரனே, எனக்காக எல்லாப் பறவைகளிடமும் காட்டு மிருகங்களிடமும் பேசு: ‘இங்கே வாருங்கள்! இங்கே வாருங்கள்! சுற்றிலும் கூடுங்கள். நான் உங்களுக்காகத் தயார் செய்து வைத்த இந்தப் பலியை உண்ணுங்கள், இஸ்ரவேலின் மலைகளில் மிகப் பெரிய பலி இருக்கும். வாருங்கள் இறைச்சியைத் தின்று இரத்தத்தைக் குடியுங்கள். 18 நீங்கள் பலமான வீரர்களின் உடல்களிலுள்ள இறைச்சியைத் தின்பீர்கள். உலகத் தலைவர்களின் இரத்தத்தை நீங்கள் குடிப்பீர்கள். அவர்கள் பாசானிலே கொழுத்துப்போன ஆட்டுக் கடாக்களுக்கும், ஆட்டுக் குட்டிகளுக்கும், வெள்ளாட்டுக் கடாக்களுக்கும், காளைகளுக்கும் சமமானவர்கள். 19 நீங்கள் உங்கள் விருப்பம்போல் கொழுப்பை எல்லாம் உண்ணலாம். நீங்கள் வயிறு நிறைய இரத்தம் குடிக்கலாம். நான் உங்களுக்காகக் கொன்ற எனது பலிகளிலிருந்து நீங்கள் உண்பீர்கள், குடிப்பீர்கள். 20 எனது மேசையில் உங்களுக்கு உண்ண நிறைய ஏராளமாக இறைச்சி இருக்கும். அங்கே குதிரைகளும், இரதமோட்டிகளும், ஆற்றலுடைய வீரர்களும், போர் வீரர்களும் இருப்பார்கள்.’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

21 தேவன் சொன்னார்: “நான் என்ன செய்திருக்கிறேன் என்பதை பிற நாட்டினரைப் பார்க்கச் செய்வேன். அந்த நாடுகள் என்னை மதிக்கத் தொடங்கும்! அவர்கள் எனது வல்லமையைப் பார்ப்பார்கள். இந்த வல்லமை அந்தப் பகைவனுக்கு எதிராகப் பயன்படுத்தியது. 22 பிறகு அந்நாளிலிருந்து இஸ்ரவேல் வம்சத்தார் நானே அவர்களது கர்த்தராகிய ஆண்டவர் என்பதை அறிவார்கள். 23 அந்நாடுகள் இஸ்ரவேல் வம்சத்தார் ஏன் பிற நாடுகளுக்குச் சிறைபிடிக்கப்பட்டு கொண்டுபோகப்பட்டார்கள் என்பதை அறியும். என் ஜனங்கள் எனக்கு விரோதமாக மாறினார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே நான் அவர்களிடமிருந்து விலகினேன். நான் அவர்களை அவர்களது பகைவர்கள் தோற்கடிக்கும்படிச் செய்தேன். எனவே, என் ஜனங்கள் போரில் கொல்லப்பட்டார்கள். 24 அவர்கள் பாவம் செய்து தம்மைத்தாமே அசுத்தம் செய்துகொண்டார்கள். எனவே அவர்கள் செய்தவற்றிற்காக நான் அவர்களைத் தண்டித்தேன். நான் அவர்களிடமிருந்து விலகி அவர்களுக்கு உதவி செய்ய மறுத்தேன்.”

25 எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “இப்பொழுது நான் யாக்கோபு வம்சத்தாரை சிறையிருப்பிலிருந்து கொண்டுவருவேன். நான் இஸ்ரவேல் வம்சத்தார் எல்லோர் மீதும் இரக்கம் கொள்வேன். நான் எனது பரிசுத்தமான நாமத்திற்காக பலமான உணர்ச்சியைக் காட்டுவேன். 26 ஜனங்கள் கடந்தகாலத்தில் எனக்கு விரோதமாகச் செய்தத் தீயச்செயல்களுக்காக வெட்கப்படுவார்கள். அவர்கள் சொந்த நாட்டில் பாதுகாப்பாக இருப்பார்கள். எவரும் அவர்களை அச்சப்படுத்தமுடியாது. 27 நான் மற்ற நாடுகளிலிருந்து என் ஜனங்களைத் திரும்பக் கொண்டுவருவேன். அவர்களின் பகைவரது நாடுகளிலிருந்து அவர்களை ஒன்று கூட்டுவேன். பிறகு, பல நாடுகள் நான் எவ்வளவு பரிசுத்தமானவர் என்பதைக் காணும். 28 அவர்கள் நானே அவர்களது தேவனாகிய கர்த்தர் என்பதை அறிவார்கள். ஏனென்றால், நான் அவர்களைத் தம் சொந்த வீட்டினை விட்டு நாடு கடத்தப்பட்டு சிறை இருக்கச் செய்தேன். நான் அவர்களை ஒன்று கூட்டி அவர்களது நாட்டுக்குத் திரும்பக் கொண்டுவந்தேன். எந்த இஸ்ரவேலனும் சிறையிருப்பில் இருக்கமாட்டான். 29 நான் எனது ஆவியை இஸ்ரவேல் வம்சத்தாரிடம் ஊற்றுவேன். அதற்குப் பிறகு, நான் மீண்டும் என் ஜனங்களைவிட்டு விலகமாட்டேன்” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார்.